சமயங்களைக் கடந்து இதயங்களை இணைக்கும் மந்திரச்சொல் 'இந்தியா'. மதங்களாலும், மொழிகளாலும், மாநிலங்களாலும் பிரிக்கப் பட்டிருந்தாலும் 'இந்தியர்கள்' என்று இணைக்கப் பட்டிருக்கிறோம். தேசிய அளவில், ஊழலாலும் ஒடுக்கப்படுதலாலும் பாதிக்கப்படும் போது பாகுபாடின்றி பலியாகிறோம். புகழடைந்தாலும் பெருமை சேர்த்தாலும் வேறுபாடின்றிப் பாராட்டுகிறோம். வேறெங்கும் எடுத்துக்காட்டாகச் சொல்லமுடியா வண்ணம், வேற்றுமையில் ஒற்றுமை காணும் பெரிய நாடு இந்தியா. ஆற்றலும் அறிவும் நிறைந்த இளைஞர்களை அதிகமாகக் கொண்டதில் முன்னணியாகத் திகழும் நாடு நம் நாடு.
வளர்ந்த முதலாம் நாடுகள், தங்கள் இளைஞர்களுக்கும் மாணவர்களுக்கும் அறிவுரை கூறும் போது நம் இளைய பாரதத்தை மேற்கோள் காட்டுகிறார்கள் (அண்மையில் திரு.ஒபாமா). இத்தகைய நம் இளைய சமுதாயத்தை, முற்றிலும் முறைகேடுகள் நிறைந்த, நாட்டின் பாதுகாப்பிற்கும் வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் கொடுக்காத, கல்வியையும் நலத்தையும் தனி-முதலாளிகளுக்குத் தாரை வார்த்துக் கொடுத்த, 'அரசியல் சூழல்' சீரழித்து, வணிகப் பொருள்களாகச் சந்தைப் படுத்திவருகிறது.
இந்தியாவின் எல்லா மத்திய-மாநில நிர்வாக அமைப்புகளிலும், முற்றிலும் பற்றிப் படர்ந்து கிடக்கும் சுரண்டல்கள் ஓரளவிற்காவது ஒழிக்கப்பட்டால்; ஆன்மீக நிறுவனங்களில் அளவுக்கு அதிகமாக குவிந்து அல்லது மறைந்து கிடக்கும் செல்வங்கள் முறைப்படுத்தப் பட்டால்; ஆட்சி மாற்றங்களுக்குப் பின் புதிய அரசின் விளம்பரங்களுக்கும், பழைய அரசைப் பழிவாங்கவும் ஆகும் செலவைச் சேமித்தால்; அழிக்கப்படும் திட்டங்களும், புகுத்தப்படும் திட்டங்களும் விரயமாகக் காசை காவு கொள்ளாமல் இருந்தால்; அரசியல் கட்சிகளையும் தேர்தல் செலவு களையும் கட்டுப்படுத்தினால்; சுயநலத்தையும் ஆடம்பரங்களையும் இந்தியர்கள் கொஞ்சம் விட்டுக்கொடுத்தால்; இலவசங்களாலும் போதைகளாலும் இயங்காமல் சோம்பேறிகளாய்க் கிடக்கும் மக்கள் கொஞ்சம் மாறினால்; உலகின் உச்சத்தில் நிச்சயம் நம் தேசத்தின் சின்னங்கள் சரித்திரம் படைக்கும். தந்திரங்கள் இல்லாமல் இந்த மாற்றங்களை நிகழ்த்த வல்ல மந்திரவாதிகள் இன்றைய இந்திய இளைய சமூகத்தினரைத் தவிர, வேறு யாராக இருக்க முடியும்?
மூன்றாம் நாடுகளை நோக்கியே.. உலகச்சந்தைகள் ஓடி வருகின்றன. அங்கும் நடுத்தர வர்க்கத்தினரைத் தான் கிடுக்குப் பிடி போட்டுப் பிடிக்கின்றன. ஒரு புறம், பொருள் வாங்கச் செல்லும் நாமே அவர்களுக்குப் பொருளாகிப் போகிறோம்!. மறு புறம், புரட்சியும் வளர்ச்சியும் நிறைந்த தகவல் தொழில் நுட்ப வலையில் சிக்காமல் செல்லத் தெரியாத வாழ்க்கைப் பயம்!. இந்திய இளைஞனே! உன் கல்வியும் காசும் உனக்கு மட்டும் தானா ..? உன் பிள்ளைகளுக்குக் கூடக் கிடையாதா..? தாகம் தீர்க்கும் தண்ணீர் கிடைப்பதும், வசிக்க வீடும், சுவாசிக்கக் காற்றும் திண்ணச்சோறும், தேகநலனும் அடுத்த தலைமுறைக்குக் கொடுக்கச் சிந்தித்துப் பார்... இந்தச்சுதந்திரத் தினத் தருணங்களில்...
நம்பிக்கையுடன்...
-தளபதி.
நல்ல பதிவு.
ReplyDeleteதொடர்ந்து எழுதுங்கள்.
வாழ்த்துக்கள்.
http://rathnavel-natarajan.blogspot.com/2011/08/blog-post_16.html
தங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி ஐயா.
ReplyDelete