Sunday, August 28, 2011

கர்வமா..? கருணையா.?

           மனசாட்சியை முன் நிறுத்துங்கள்! வெறும் குற்றவாளிகளாக.., பழிவாங்கப்படுபவர்களாக.., கூறப்பட்ட நீதிக்குரியவர்களாக...ப் பார்க்க நினைப்பது சரியா..? ஒரு இனமே! வேண்டுகோள் விடுகையில். கருணை காட்டச் சொல்வதில் நியாயமில்லையா..? முதன்மைக்குற்ற வாளிகளாகவும் துணைக்குற்றவாளிகளாகவும் கருதமுடியாத நிலையில் சம்பந்தப்பட்டவர்கள் என்ற நிலையில், இவ்வளவு பெரிய தண்டனை என்பது குறைக்கப்பட வேண்டும், என்ற வேண்டுகோள் நியாயம் எனக்கருதினால்.. அந்த மூவருக்காகக் குரல் கொடுங்கள்! 
                      உலகமே! தமிழினத்தில் உயிரிழப்புகள் போதாதா..!.  
         தூக்குத்தண்டனை, மரணதண்டனைகள் பற்றி பின்பு விவாதிக்கலாம். ஏற்கனவே பல நாடுகள் தெளிவடைந்து சில முடிவுகளுக்கு வந்துள்ளன. இங்கே மூன்று உயிர்களின் கால அவகாசம் குறுகிக் கொண்டிருக்கும் தருணம். கருணை மனுக்கள் கருணைக்காக ஏங்கும் கண்களின் எதிர்பார்ப்பு. நாட்டின் முதல்குடிமகனிடம் முறையிட்டு வேண்டுவது. இம்முறை முதல் குடிமகள்  ஒரு தாய். தாயிடம் கருணை கிடைப்பது எதிர்பார்ப்பது தானே... எல்லா குற்றவாளிகளுக்கும் கருணை காட்டுவது என்பதல்ல தான். மூன்று தமிழர்கள் சற்றுத் தொலைவிலேயே.. தங்களுக்கான தூக்குக்கயிறுகளை பார்த்து கொண்டிருக்கும் குற்றவாளிகளாக நிற்கிறார்கள்! குற்றங்களுக்கேற்ப கருணை பிறக்கலாமே.. என்ற ஏக்கம் தான் எல்லார் கண்களையும் கலங்க வைக்கின்றது.
            அழுகை அடங்காது அந்நியப்பட்டுக் கிடக்கும் தமிழர்கள், மூன்று உயிழப்பிலா முடங்கிப் போய்விடுவார்கள்?  அநியாய சக்திகளாலும், நம்பிக்கைத் துரோகத்தாலும், நயவஞ்சகத்தாலும் மனிதகுல எதிரி என உலகம் தூற்றிய கொடுங்கோலன் கைகளால், விடுதலைப் போரில் வீழ்ந்தும் சிதைந்தும் போன ஈழத்தமிழினம், இன்று தாய்த் தமிழ்நாட்டில் ஊசலாடும் மூன்று உயிர்களை இந்தியத் தமிழர்கள் காத்துவிடமாட்டார்களா.. என்று,  இன்னும் நம்பித் தவிக்கிறது.
கூட்டு வழிபாடு.. கூட்டு உண்ணாவிரதம்... மனிதச்சங்கிலி... போராட்டம் ... ஒத்துழையாமை... கண்களில் கட்டு... சாலையில் சமையல்... உள்ளிருப்பு... வெளிநடப்பு..  இதெல்லாம் தேசம் முழுவதும்.. திரும்பிய பக்கங்களில் எல்லாம்...  இவைகள், தேவையாகவோ..தேவையற்றோ?  எனக் கருத்து சொல்ல வரவில்லை.
         என்ன செய்வோம் !  தமிழன் என்பதால்  நீதி எதிராகுமா?  தமிழன் என்பதால் கருணையும் மறுக்கப்படுமா?  இணைந்து குரல் கொடுப்போம்!  நம் குரல் கேட்டு அம்மூவர் மரணம் மறக்கட்டும்.


No comments:

Post a Comment