Sunday, August 28, 2011
Friday, August 5, 2011
சுதந்திரதினத்திற்குச் சொல்லிக்கொள்ள..
சமயங்களைக் கடந்து இதயங்களை இணைக்கும் மந்திரச்சொல் 'இந்தியா'. மதங்களாலும், மொழிகளாலும், மாநிலங்களாலும் பிரிக்கப் பட்டிருந்தாலும் 'இந்தியர்கள்' என்று இணைக்கப் பட்டிருக்கிறோம். தேசிய அளவில், ஊழலாலும் ஒடுக்கப்படுதலாலும் பாதிக்கப்படும் போது பாகுபாடின்றி பலியாகிறோம். புகழடைந்தாலும் பெருமை சேர்த்தாலும் வேறுபாடின்றிப் பாராட்டுகிறோம். வேறெங்கும் எடுத்துக்காட்டாகச் சொல்லமுடியா வண்ணம், வேற்றுமையில் ஒற்றுமை காணும் பெரிய நாடு இந்தியா. ஆற்றலும் அறிவும் நிறைந்த இளைஞர்களை அதிகமாகக் கொண்டதில் முன்னணியாகத் திகழும் நாடு நம் நாடு.
வளர்ந்த முதலாம் நாடுகள், தங்கள் இளைஞர்களுக்கும் மாணவர்களுக்கும் அறிவுரை கூறும் போது நம் இளைய பாரதத்தை மேற்கோள் காட்டுகிறார்கள் (அண்மையில் திரு.ஒபாமா). இத்தகைய நம் இளைய சமுதாயத்தை, முற்றிலும் முறைகேடுகள் நிறைந்த, நாட்டின் பாதுகாப்பிற்கும் வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் கொடுக்காத, கல்வியையும் நலத்தையும் தனி-முதலாளிகளுக்குத் தாரை வார்த்துக் கொடுத்த, 'அரசியல் சூழல்' சீரழித்து, வணிகப் பொருள்களாகச் சந்தைப் படுத்திவருகிறது.
இந்தியாவின் எல்லா மத்திய-மாநில நிர்வாக அமைப்புகளிலும், முற்றிலும் பற்றிப் படர்ந்து கிடக்கும் சுரண்டல்கள் ஓரளவிற்காவது ஒழிக்கப்பட்டால்; ஆன்மீக நிறுவனங்களில் அளவுக்கு அதிகமாக குவிந்து அல்லது மறைந்து கிடக்கும் செல்வங்கள் முறைப்படுத்தப் பட்டால்; ஆட்சி மாற்றங்களுக்குப் பின் புதிய அரசின் விளம்பரங்களுக்கும், பழைய அரசைப் பழிவாங்கவும் ஆகும் செலவைச் சேமித்தால்; அழிக்கப்படும் திட்டங்களும், புகுத்தப்படும் திட்டங்களும் விரயமாகக் காசை காவு கொள்ளாமல் இருந்தால்; அரசியல் கட்சிகளையும் தேர்தல் செலவு களையும் கட்டுப்படுத்தினால்; சுயநலத்தையும் ஆடம்பரங்களையும் இந்தியர்கள் கொஞ்சம் விட்டுக்கொடுத்தால்; இலவசங்களாலும் போதைகளாலும் இயங்காமல் சோம்பேறிகளாய்க் கிடக்கும் மக்கள் கொஞ்சம் மாறினால்; உலகின் உச்சத்தில் நிச்சயம் நம் தேசத்தின் சின்னங்கள் சரித்திரம் படைக்கும். தந்திரங்கள் இல்லாமல் இந்த மாற்றங்களை நிகழ்த்த வல்ல மந்திரவாதிகள் இன்றைய இந்திய இளைய சமூகத்தினரைத் தவிர, வேறு யாராக இருக்க முடியும்?
மூன்றாம் நாடுகளை நோக்கியே.. உலகச்சந்தைகள் ஓடி வருகின்றன. அங்கும் நடுத்தர வர்க்கத்தினரைத் தான் கிடுக்குப் பிடி போட்டுப் பிடிக்கின்றன. ஒரு புறம், பொருள் வாங்கச் செல்லும் நாமே அவர்களுக்குப் பொருளாகிப் போகிறோம்!. மறு புறம், புரட்சியும் வளர்ச்சியும் நிறைந்த தகவல் தொழில் நுட்ப வலையில் சிக்காமல் செல்லத் தெரியாத வாழ்க்கைப் பயம்!. இந்திய இளைஞனே! உன் கல்வியும் காசும் உனக்கு மட்டும் தானா ..? உன் பிள்ளைகளுக்குக் கூடக் கிடையாதா..? தாகம் தீர்க்கும் தண்ணீர் கிடைப்பதும், வசிக்க வீடும், சுவாசிக்கக் காற்றும் திண்ணச்சோறும், தேகநலனும் அடுத்த தலைமுறைக்குக் கொடுக்கச் சிந்தித்துப் பார்... இந்தச்சுதந்திரத் தினத் தருணங்களில்...
நம்பிக்கையுடன்...
-தளபதி.
Wednesday, August 3, 2011
வணக்கம்
அன்பு தோழமையே! வணக்கம்.
உங்களோடு இந்த வலைப்பூ வழியாகத் தொடர்பு கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். பத்து ஆண்டுகளுக்கு முன்பே 'பதம் என்ற இந்தச் சிந்தனைக்களம் பேராசிரியர்களான நானும், கவிஞர் பச்சியப்பன், முனைவர் பா.ரவிக்குமார் மற்றும் எங்கள் மாணவர்கள் சிலரும் என் வீட்டுமாடியில் ஒரு மாலைப்பொழுது கலந்துரையாடி, ஒரு சிறிய இலக்கிய அமைப்பாக உருவாக்கினோம். மாதம் ஒரு முறை கூடி, கலை-இலக்கியம், சமூகம், திரைப்படம் குறித்து கலந்துரையாடி வந்தோம். நண்பர்கள் வீடு, கல்லூரிவளாகம் என, பிடித்த இடங்களில் சில மாதங்கள் கூடினோம். பின்பு சூழலின் விளைவாகத் தொடர்ந்தியங்க இயலாமற் போனது. பிற்காலத்தில் இப்பெயரில் இயங்க எண்ணம். தருணம் தற்போது இந்த வலைப்பூ.
தமிழ் மொழியும். தமிழுலகமும் தொன்மையும் பெருமையும் மிக்கவை. எப்போதும் தம்மை முழுவதும் இழந்து விடாமல் புதுப்பித்துக் கொள்ளும் நுட்பம் நிறைந்தவை. உலகின் பொது நிலையில், உள்ள அல்லது தோன்றும் எல்லா கலைகள் மற்றும் இலக்கியங்கள் சார்ந்த விளைவுகள், தமிழிலும் தமிழுலகிலும் தவிர்க்க முடியாமல் போகும் சூழல்கள் நிலவுகின்றன. இக்கால கட்டத்தில் எம்மாலும் ஏதேனும் பங்களிப்பைச் செய்வதில் ஒரு மகிழ்வு.அடுத்தத்தலைமுறைகளுக்கு ஏதேனும் பதிவுகளை இட்டுச் செல்வோம். எடுத்துக் கொள்வோரை அல்லது ஏற்றுக்கொள்வோரை வரவேற்கிறேன். வாருங்கள்! இணைவோம் இனிதாக! நட்பாக அழைக்கிறேன். நன்றி! உங்கள் அன்பு,
- தளபதி
Subscribe to:
Posts (Atom)