'தமிழ்' என்றால் இரக்கத்தின் மொழி என்பார்கள். 'தமிழன்' என்றால் வந்தாரை வாழ வைப்பவன் என்பார்கள். நகைச்சுவை நடிகர் அடிவாங்கி அழுதுகொண்டு சொல்வது போல், தமிழா! போதுமடா.. உன் பெருமை!. உணர்வு வயப்படுவது கூட, எல்லாவற்றிலும் இருக்கனும். இல்லை அறிவு வயப்பட்டு சிந்திக்கத் தொடங்கனும்.
தமிழின வரலாற்றை, தவறின்றி, பள்ளிக் குழந்தைகளின் பாடப்புத்தகங்களில் கொண்டு வாருங்கள். அவர்கள் போராட வர வேண்டாம் புரிந்து கொள்ளவாவது வழி வகுப்போம். இப்போதே ஊடகங்களில் சில உண்மையானவர்களின் உண்மையான விவாதங்கள், பேச்சுகள், நேர்காணல்கள் நடைபெறும் போது பிள்ளைகளுக்கு விளங்கிக் கொள்ள முடியாத இடைவெளி அதிகமாகிக் கொண்டிருக்கிறது.
கோபத்துடன், பதிலடியாக, உண்மைத் தகவல்களைப் பலர் பதிவு செய்யும் துணிவும் தொடர்பும் நமக்கு நம்பிக்கையளித்தாலும், அவற்றைப் புரிந்து பின் தொடர இயலாத, அடுத்த தலைமுறைக்கான இடைவெளியும் நம்மை அச்சுறுத்துகிறது. அதனால் தான் பள்ளிக்கல்வியின் பாடத்திட்டங்களில் தேவைக்கேற்ப பருவத்திற்குரிய பக்குவத்துடன் தமிழக வரலாறு முறைபடியாக சொல்லிக் கொடுக்க வேண்டிய அவசியம் உள்ளது.
1956-ல் செங்கோட்டை, மற்றும் கன்னியாகுமரி பகுதிகள் தமிழகத்துடன் இணைக்கப் படும் போது நிகழ்ந்த குறைபாடுகள், தமிழகத்தின் பிற எல்லைகள் குறிப்பாக வடக்கு எல்லைப் பகுதிகளில் அமைந்த அவலங்கள், ...எல்லாமே நம் தலைவர்களின் தொலைநோக்கற்ற! இன்னும் சொல்லப் போனால் அக்கறையற்ற அணுகுமுறைகளை வரலாறு மறுக்காது. அதே நேரத்தில் எல்லைப் போராட்டங்களில் தியாகம் செய்தவர்களுக்கு நினைவு செலுத்துவதையும் தமிழக வரலாற்றுப் பாடத்திட்டங்களில் நினைவு கூர்ந்து வருங்காலத் தலைமுறைகள் அறிந்துகொள்ளச் செய்வதிலும் நாம் கடமை மறந்தவர்களாகவே இருக்கிறோம்.
நம் அரசியல் கட்சிகள் மொழியால்.. இனத்தால்.. இணைந்த சிந்தனைக்கும் செயலுக்கும் எப்போது வரப்போகிறார்கள் ? அவர்களுக்கு இதை அறிவுறுத்த, நெறிப்படுத்த முனைவோர், தலைமை கொள்வோர் பின் திரள்வோம்.. நண்பர்களுக்கும் அறிவுறுத்துவோம்..
No comments:
Post a Comment